முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்மையை தரக்கூடியதாக இருக்கிறது. முருங்கை மரத்தில் உள்ள முருங்கைக்கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ ஆகிய அனைத்துமே மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நன்மைகளை தரக்கூடிய இந்த மரத்தினை அதிசய மரம் என்றும் கூறுவர். ஆனால் இந்த மரத்தில் உள்ள பல நன்மைகளை தரக்கூடிய முருங்கை பிசினை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனைப் பற்றி தற்போது காண்போம்.
இந்த முருங்கை பிசின் பார்ப்பதற்கு ரப்பர் போன்று ஆனால் மிகுந்த கடினத் தன்மையுடன் இருக்கும். ஆரம்பத்தில் நீர் தன்மையாக இருந்தாலும் அது போக போக கடினமாக மாறிவிடும். முருங்கை மரத்தின் பட்டைகளில் இது ஆங்காங்கே ஒட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய கால்சியம், சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து ஆகிய அனைத்தும் இணைந்து தான் இந்த பிசின் உருவாகிறது.
இதனை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இதன் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இது தேவையற்ற ஒரு பொருள் என்று சாதாரணமாக விட்டிருப்போம். ஆனால் இது தங்க பஸ்பத்திற்கு ஈடான ஒரு பொருள் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இதில் பலவிதமான சத்துக்கள், தாது உப்புகள், வேதிப்பொருட்கள்,அமினோ அமிலங்கள் ஆகிய அனைத்தும் உள்ளது.
இது ஆஸ்துமா, காய்ச்சல், சிறுநீர் நன்றாக வெளியேறுவதற்கு என பல விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாயு தொல்லை இருப்பவர்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. தலைவலி இருக்கும் பொழுது இந்த பிசினை பாலுடன் கலந்து தலையில் பத்து போடுவதன் மூலம் தலைவலி விரைவில் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பாதாம் பிசினை பொடி ஆக்கி பால் மற்றும் பனம் கற்கண்டு சேர்த்து இதனை சாப்பிட்டால் உடலுக்கு பலவிதமான சக்திகளை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த முருங்கை பிசினை இரவில் ஊற வைத்து மறுநாள் காலை பாலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆண்மை குறைவு பிரச்சனையும் சரி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இது நமது பாரம்பரியமிக்க ஒரு உணவுப் பொருளாகும். இதனைப் பற்றி இங்கு பலரும் அறியாமல் இருப்போம். எனவே இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.