ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்ப நமது உடலின் நிறம், முடி உதிர்வு, உடலில் வெப்பம் அதிகரிப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த காலநிலை மாற்றத்தை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்தந்த கால நிலைக்கு ஏற்ப தக்க உணவினையும், பாதுகாப்பினையும் நாம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக, வெயில் காலத்தில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை கூடுதலாக இருக்கும். அதிகப்படியான உஷ்ணம் மற்றும் வியர்வையின் தாக்கத்தில் முடி வறட்சித் தன்மையுடன் காணப்படும். இதுவே வெயில் காலத்தில் அதிகமாக முடி உதிர்வதற்கான காரணங்கள்.
இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். அதேபோல், முடியையும் வெயில் காலத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இப்படி செய்தால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.வீட்டில் இருக்கும் ஒரே ஒரு பொருளைக் கொண்டு வெயில் காலத்திற்கு ஏற்ற ஹேர்பேக் ஒன்றை தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து சிறிதளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் ஊறிய இந்த வெந்தயத்தினை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து உச்சந்தலை முதல் முடி முழுவதும் தடவிக் கொள்ளலாம். இந்த ஹேர் பேக்கை போடுவதன் மூலம் நமது உடல் சூடு குறைந்து முடி உதிர்வு குறைக்கப்படும். இந்த ஹேர் பேக்கை 30 நிமிடம் நமது தலையில் அப்படியே ஊற விட்டு பின்பு தலைக்கு குளித்து விட வேண்டும்.
இந்த ஒரே ஒரு பொருள் வெயில் காலங்களில் நமது உடல் உஷ்ணத்தை குறைத்து முடி உதிர்வை தடுக்கும்.