2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீ, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மற்ற கட்சிகளின் நிலவரம்தான் என்னவென்பது தெரியவில்லை.
அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகவே தெரியவும். ஒருபக்கம், சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் இருக்கிறது.
சீமான் எப்போதும் தனித்தே போட்டியிட்டு வருகிறார். இந்த முறை என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவரின் கொள்கை வேறாக இருக்கிறது. விஜயே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனெனில், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது.
இந்நிலையில், திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். விஜய், சீமான் போன்றவர்கள் தங்களுடன் வந்தாலும் ஓகேதான் என்கிற மனநிலையில் அவர் இருக்கிறார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் ‘எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை வரவேற்கிறேன். ஆனால், நான் திமுகவை தனித்தே எதிர்ப்பேன்.. கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ என சொல்லியிருக்கிறார். ஆனால், தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் என்னென்ன நடக்கும் என கணிக்க முடியாத நிலையில் தமிழக அரசியல் நிலவரம் இருக்கிறது.