இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை.
தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் நடித்தார். துவக்கத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்த மனோஜ் ஒரு கட்டத்தில் கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார்.
அப்பா பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தையும் மனோஜ் இயக்கினார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த சில வருடங்களில் சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் மனோஜ் பார்த்து வந்தார். அதேநேரம், 2022ம் வருடத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
அந்நிலையில்தான், நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக சொல்லப்படும் நிலையில், அவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனோஜின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை சூர்யா உள்ளிட்ட சிலர் சென்றதையடுத்து விஜய் அங்கே சென்றார். மனோஜின் வீடு நீலாங்கரையில் விஜய் தங்கியுள்ள வீட்டின் அருகேதான் இருக்கிறது. எனவே, நடந்து சென்றே அஞ்சலி செலுத்திய விஜய் அங்கு சோகமாக அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.