சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் 27ம் தேதி காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதன்பின் பேசி தீர்க்கப்பட்டு மாலை 5 மணிக்கே தியேட்டர்களில் வெளியானது. எனவே, முதல்நாள் வசூல் பாதிக்கப்பட்டது.
அதேநேரம் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இந்த படத்திற்கு விக்ரம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். விக்ரமும் எல்லா ஊர்களுக்கும் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். ஒருபக்கம் படம் நன்றாக இருப்பதாக விமர்சனமும் வந்தது. குறிப்பாக விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சொன்னார்கள்.
ஆனால், படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தபின்னரும் படம் பெரிய வசூலை பெறவில்லை. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இந்தியாவில் 28.5 கோடியும், வெளிநாடுகளில் 7 கோடி என மொத்தம் 35 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. போன ஞாயிறு அன்று இந்தியாவில் 6.75 கோடி வசூல் செய்ததே அதிக வசூல். அதன்பின் வசூல் குறைந்து இப்போது தினமும் 2 கோடி என்றே வசூலாகி வருகிறது. மொத்தத்தில் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் மகத்தான வசூலை பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.