எடப்பாடி பழனிச்சாமி எப்போது டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்தாரே அப்போதே தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. எனவே, தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற செய்தி பரவியது. அதோடு, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஒருபக்கம் சோகமான முகத்தோடு பேட்டி கொடுத்த அண்ணாமலை ‘கட்சியின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். நான் ஒரு சாதாரண பாஜக தொண்டன். பதவி எனக்கு முக்கியமில்லை. இதைவிட பெரிய பதவியில் இருந்து வந்தவன் நான். என்னிடம் தோட்டம் உண்டு. ஆடு மாடு உண்டு. அதை வைத்து சந்தோஷமாக இருப்பேன்’ என சொன்னார். எனவே வெளியான செய்தி உண்மைதானோ என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.
அதோடு, ஏற்கனவே சொன்னது போல எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேட்டி கொடுத்தார். எனவே, அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்றிவிட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒருபக்கம், தமிழக பாஜக தலைவரை நியமிக்க டெல்லியிலிருந்து கிஷன் ரெட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையே நீடிப்பார் என செய்திகள் வெளிவந்திருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை கருத்து கேட்டோ, ஓட்டெடுப்பு நடத்தியோ மாநில தலைவரை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். பாஜக தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுவே இறுதி முடிவு. இதுவரை நான் பாஜக தலைவர் பதவிக்கு வர விரும்புகிறேன் என தமிழ்நாட்டிலிருந்து யாரும் கட்சி தலைமைக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. எனவே, தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள். இது தெரிந்துதான் ‘புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் இன்னும் நிறைய பேசுகிறேன்’ என அண்ணாமலை செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.