நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சினிமா உலகில் இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இவர். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவரின் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் சென்றபோது, அதை சீமானின் பாதுகாவலர் கிழிக்க அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் போலீஸ் நிலையம் சென்று வாக்குமூலம் கொடுத்தார் சீமான்.
அவ்வப்போது சர்ச்சையாகி பேசி வழக்குகளில் சிக்குவார். எனவே, அடிக்கடி போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வார். அதில் பல வழக்குகளுக்கு நேரில் செல்ல மாட்டார். அதன்பின் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தால் அதன்பின் செல்வார். தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக டிஐஜி வருண்குமார் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், சீமான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.