நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி துவங்கி வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று அவரின் நிர்வாகிகள் முன்பு திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள். விஜய் வீட்டிலிருந்தே அரசியல் செய்து வருகிறார். பனையூர் அரசியல்வாதி.. திமுகவை வாரிசு அரசியல் என விமர்சிக்கும் விஜய் சினிமா வாரிசு இல்லையா?.. அவரின் அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவுக்கு வந்தவர்தானே விஜய் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலையை பாஜக அரசு 50 ரூபாய் உயர்த்திவிட்டது. இதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்துள்ளார்.

விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ அல்லது இலவசமாக டிக்கெட் கொடுக்கிறேன் என சொல்லுவாரா?.. யார் தடுத்தார்கள்?. உங்களுக்கு லாபம் என்றால் பேசமாட்டீர்களா?.. ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.. விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அவருக்கோ அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது’ என பேசியிருக்கிறார்.