தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன்(93) வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். உடல்நிலை பாதிப்பால் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள யோகா மருத்துவமனையில் அவர் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களின் அவரின் உடல் மோசமடைந்தது. எனவே, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்தான், நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவரின் அப்பா சுதந்திர போட்ட தியாகி. காமராஜரின் சீடர்களில் இவர் முக்கியமானவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். மக்களின் நலனுக்காக 17 முறை தமிழகமெங்கும் நடைபயணம் மேற்கொண்டார். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் இருந்தார்.
1977ம் வருடம் நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நான்கு முறை சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய் மொழி தமிழுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் காமராஜர் விருது பெற்றிருக்கிறர்.
இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று குமரி ஆனந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கதறி அழுத தமிழிசையின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு மரியாதையுடன் குமரி ஆனந்தன் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.