விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.
எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்நிலையில், முதல் காட்சி முடிந்த சிறுதி நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறது.
படம் வெளியான முதல் நாளிலேயே HD தரத்தில் இப்படம் இணையத்தில் வெளியானது அஜித் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.