விழுப்புரத்தை சேர்ந்தவர் பொன்முடி. கல்லூரி பேராசியராக இருந்த போதிலிருந்த திமுகவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். 1984ம் வருடம் கருணாநிதி தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டது. 1989ம் வருடம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.
விழுப்புரம் தொகுதியில் 4 முறையும், திருக்கோயிலூர் தொகுதியில் 2 முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை உயர் கல்வி அமைச்சர், வனத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார். நில அபகரிப்பு வழக்கு, செம்மண் குவாரி வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் சிக்கினார். சொத்து குவிப்பு வழக்கில் இவருக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவி பறிப்போனது. அதன்பின், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று மீண்டும் அமைச்சராக மாறினார்.
பொன்முடி தொடார்ந்து சர்ச்சையாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். திமுக அரசு மகளிருக்கு இலவச பயணம் கொடுத்ததை ஓசி என பேசி எதிர்ப்பை பெற்றார். பட்டியலின பெண் ஊராட்சி ஒன்றிய தலைவரின் சாதி குறித்து கேட்டதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. ஒரு விழாவில் பேசிய ஸ்டாலின் ‘காலையில் எழுந்தாலே யார் என்ன பேசி பிரச்சனை வருமோ என்கிற பயமே எனக்கு வந்துவிட்டது’ என சொல்லும் அளவுக்கு சென்றது.
ஒருமுறை தொகுதிக்கு போன போது சில கோரிக்கைகள் பற்றி பெண்கள் அவரிடம் பேச ‘நீங்களாம் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா?’ என கடிந்துகொண்டார். இப்போது கடந்த 6ம் தேதி சைவம், வைணவம் என பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எனவே, இவரிடமிருந்து துணை பொதுச்செயலாளர் பதவியை இப்போது ஸ்டாலின் பறித்திருக்கிறார்.
பொன்முடி இனிமேலாவது திருந்த வேண்டும். அவர் மீது ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.