Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித்துக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.