தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை.
முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். எனவே, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. எனக்கு ஆசை காட்டி திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். எனவே, அதிமுகவுடன் தவெக இணையும். இதைத்தவிர விஜய்க்கும் வேறு வழியில்லை என பலரும் நினைத்தார்கள்.
ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, விஜய் தனித்துவிடப்படுவாரா என்கிற எண்ணமும் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயுடன் இணைவார் என தோன்றவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசி பழ. கருப்பையா ‘விஜயுடன் கூட்டணி போட வேண்டும் என்பதே பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடம் என பிரித்து கொள்வோம் என விஜய் சொன்னதை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் பாஜக பக்கம் போய்விட்டார்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு புதிய தகவலை சொல்லியிருக்கிறார். அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான். ஆனால், 90 சீட் மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கேட்டதால் பழனிச்சாமி பாஜக பக்கம் போய்விட்டர். விஜய் கேட்டதை கொடுத்திருந்தால் பழனிச்சாமியின் அதிகாரத்திற்கே பங்கம் வந்திருக்கும்’ என பேசியிருக்கிறார்.