K. Ponmudy : தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, மதச்சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர், சைவம் மற்றும் வைணவத்தை உடலுறவுடன் ஒப்பிட்டுப் பேசியது பொதுமக்கள் மத்தியில் கண்டனத்திற்கு ஆளானது. இது சமூகத்திலும், பல மத அமைப்புகளிடையும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
இந்நிலையில் நிலைமையை சுதாரித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தானே முன்வந்து அவருடைய கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அது சரியான தீர்வு அல்ல என அங்கங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக பேச்சாளர்கள் பலர் ஆபாசமாக பேசுவது பின்னர் அதற்காக அவர்கள் மீது பெயரளவுக்கு கட்சி நடவடிக்கை எடுப்பதும், பின்னர் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வதும் வழக்கமாகி விட்டது.
ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம் அப்படியல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று இப்போது அமைச்சராக பதவி வகித்து வருபவர் சிறிதும் சமூக அக்கறையில்லாமல் பெண்களையும் இந்தியாவின் பெரும்பான்மை சமூகமான இந்து மதத்தின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது பல தரப்பிலும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
அந்த வகையில் அவரது பேச்சு, இந்திய அரசியலமைப்பின் மதச்சுதந்திரத்திற்கும், சமுதாய நல்லிணக்கத்திற்கும் எதிரானதாக இருப்பதோடு, அரசியல்வாதியாக வைத்திருக்கும் பதவிக்கு பொருந்தாதது என சட்டவிரோதமாகவும் கருதப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து, பலர் அவர் பதவியில் தொடர கூடாதென வலியுறுத்தினர்.
இந்தக் கருத்து வேறுபாடுகளின் பின்னணியில், சட்டத்துறையை சேர்ந்த ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியலமைப்புச் சத்தியத்துக்கு எதிரானது என்றும், அரசு நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு, அவரை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து, பொன்முடியை கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறினாரா அவர் பதவியை நீக்க வேண்டுமா என்பது குறித்த விவாதிக்க வரும் 24 ஆம் தேதி இந்த மனுவானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.