அல்வா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வாதான். இந்தியாவில் எல்லா ஊர்களிலும் அல்வா தயாரித்தாலும் நெல்லையில் இது மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு காரணம் அந்த ஊரில் ஓடும் தாமிரபரணி ஆறின் தண்ணீர்தான். அதில் தயாரிக்கப்படும் அல்வா மிகவும் சுவையாக தயாராகிறது.
திருநெல்வேலியில் பல கடைகள் இருந்தாலும் இருட்டுக்கடை அல்வா என்பது மிகவும் பிரபலம். ஏனெனில், 50 வருடங்களுக்கும் மேல் அந்த இடத்தில் இந்த கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மின் விளக்கே இருக்காது. அதனால்தான் இருட்டுக்கடை என பெயர் வந்தது. சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டார்லின் நெல்லை சென்றிருந்தபோது இந்த கடையில் அல்வா வாங்கி சாப்பிட்டார்.
இந்த கடையில் அல்வாவுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த கடை அதிபரின் மகள் கனிஷ்கா வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக அப்பெண்ணின் தாய் கவிதா சிங் நெல்லை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
திருமணமாகி 40 நாட்களே ஆன நிலையில், தனது மகளை அவரின் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துவதாகவும், தங்களின் இருட்டு கடையை எழுதி வைக்கும்படி அடித்து துன்புறுத்தி வரதட்சணைக் கொடுமை செய்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார். மேலும், இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என தனது மகளை மிரட்டுகிறார்கள். என் மருமகனுக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அதை மறைத்து திருமணம் செய்ததோடு, அந்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டே என் மகளை வேலைக்காரி போல நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் புகார் அளித்திருக்கிறார்.