சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?
வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது.
அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனை பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர். திருமாவளவன் அந்த அழைப்பை இனமுகத்தோடு ஏற்றுக் கொண்டு, மாநாடு வெற்றியடைய வேண்டும் என தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பாமக மற்றும் விசிக கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் மோதல்களை சந்தித்திருக்கின்றன. அண்மையில் பாமக மாநாட்டில் விசிக கொடி அகற்றப்பட்டது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், இரு கட்சிகளும் சமூக நீதியை முன்வைக்கும் வகையில் போட்டியிடும் சூழலும் காணப்பட்டது.
இந்நிலையில், சித்திரை மாநாட்டிற்கான நேரடி அழைப்பு, மற்றும் அதனை திருமாவளவன் ஏற்றுக் கொண்டது, இரு கட்சிகளுக்கும் இடையே சமரச உணர்வை உருவாக்கும் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்கும் அடிப்படை மாற்றமாக இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.