BJP ADMK: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை ஆளும் கட்சிக்கு எதிராக களம் இறங்க பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பாஜக நினைக்கிறது. அதனால்தான் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இப்படி கூட்டணி வைத்ததும் பல சர்ச்சைகளுக்குள் அதிமுக பாஜக சிக்கியது. குறிப்பாக கூட்டணி முறையில் ஆட்சி என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். ஆனால் எடப்பாடி கூட்டணி ஆட்சி முறைக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கையில் பாஜக மற்றும் அதிமுக இரு கட்சி தலைவர்களும் இனி யாரும் கட்சி சார்ந்து விமர்சனம் செய்ய கூடாது என்று கூறினர். இவ்வாறு இருக்கையில் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பேசியது வைரலாக வருகிறது. அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையானது பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதற்காக அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பாஜக தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும், தொண்டர்கள் அயராது கட்சிக்காக உழைக்க வேண்டும். கூட்டணி குறித்து அதிமுகவும் பாஜக நிர்வாகிகளும் பேச வேண்டாம். இது உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. கட்டாயம் தமிழகத்தில் தாமரை மலரும் குறிப்பாக இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் என்று தீர்க்கமாக கூறியிருந்தார்.
இவர் அவ்வாறு கூறியதற்கு கூட்டணி முறையில் தான் ஆட்சி என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போல் உள்ளது. கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது என அதிமுக கூறிவரும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் சூசகமாக தெரிவித்திருப்பது பாஜகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு இது தான் என்பதை உணர்த்துகிறது.