கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவனின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பரா கமாண்டோ என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவன் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் சிறப்பு பிரிவான எஸ்.எஸ்.ஜி சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் உறுதியானது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என தகவல் தெரியவந்திருக்கிறது.