அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கோவை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார். பழனிசாமி பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களும் அவருக்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர்.
கோவை வடக்கு டவுன்ஹால் அருகில் எடப்பாடி வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே ஏற்கனவே திமுக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட திமுக நிர்வாகிகள் அதிமுக பேனரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரச்சனை பெருசானது.
பிரச்சனை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துவந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரி SIயை திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்.
SIயை நோக்கி நீ என்ன பைத்தியக்காரனா? நீ என்ன ரௌடியா? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன் என்று கோட்டை அப்பாஸ் திட்ட ஆரம்பித்தார். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி நேரடியாக திட்டிய சம்பவத்தால் அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. சிறிது நேரம் திமுகவினர் அந்த இடத்திலேயே சாலை மறியல் செய்தனர். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.