ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சொகுசு கார் வேகமாக வருவதை அறிந்து அந்த காரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பான் குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து காரையும் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு ஓமலூர் போலீசார் விசாரணையில் பெங்களூரில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு 330கிலோ பான் குட்கா கடத்தி சென்றதாகவும், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் பாலி தாலுக்கா குஜால்பூர் பகுதியைச் சேர்ந்த சௌகாராம் என்பவருடைய மகன் தினேஷ்(22) என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சுமார் 10லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 330கிலோ பான் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய குற்றத்திற்காக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.