
அ.தி.மு.கவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை காணத்தான் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இந்த பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன, அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார்.
அதோடு செப்டம்பர் 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக பரவிய தகவலையும் அவர் மறுத்துள்ளார். ஆனால் அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்னவென்றால், அ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில், செங்கோட்டையன் டெல்லிக்கு செல்வது நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்துவதற்காக தான் இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை சார்ந்திருப்பதால் பா.ஜ.கவினரிடம் அ.தி.மு.க கூட்டணியை வெளியேற்றுமாறு கூற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அ.தி.மு.க பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி கட்சி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பா.ஜ.க தலைவர்கள் அவரிடம் ஆலோசனை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கவும் இந்த பயணம் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.