
அண்மையில் ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்” பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு என்றும், நயினார் நாகேந்திரன் அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் பேசுகிறார் என்றும் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பரில் கூட்டணி குறித்த அறிவிப்பை டி.டி.வி தினகரன் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய செய்தியை கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இதில் NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, “ஈ.பி.ஸ்-யை தவிர யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் சேர்வோம்” என்று நிபந்தனை விதித்திருக்கிறார். தமிழ்நாட்டை சீர்குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகவும், எந்த துரோகத்தை எதிர்த்து அ.ம.மு.க தோன்றியதோ அந்த துரோகத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசியலில் நிலவும் கருத்து என்னவென்றால் டி.டி.வி தினகரனுக்கு NDA-கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆகுவதற்கு ஆசை வந்துவிட்டதாகவும், அவரின் கவனம் கட்சியின் மீது அல்ல எடப்பாடி பழனிசாமி மீது தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.