2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தைத் மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மக்களுக்காக நிறைவேற்றிய திட்டங்களை வலியுறுத்தியும், அதே சமயம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்ககாவும் இந்தப் பயணம் அமைகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 8 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படை கிளை உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மகளிரணி ஆகியோருடன் நேரடி தொடர்பு கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது, “2026-தேர்தலில் தி.மு.க-வை மீண்டும் வெற்றி பெறச் செய்ய, ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் பங்கு கொள்ள வேண்டும்.
மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் முன்னேறுவோம்”.உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் தி.மு.க-வின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த சுற்றுப் பயணம் தி.மு.க-வின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க-வின் மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகவும் இது திகழும், என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.