பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை பிராண்டு தூதராக நியமித்த மலபார் கோல்ட்? – சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு 

0
192
Malabar Gold Appointed Pakistani Influencer
Malabar Gold Appointed Pakistani Influencer

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்,
இங்கிலாந்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த UK இன்ஃப்ளூயன்சர் அலிஷ்பா காலித் அழைக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

சம்பவத்தின் தொடக்கம்

2025 செப்டம்பர் 6 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மலபார் கோல்ட் தனது விரிவாக்கப்பட்ட ஷோரூமின் திறப்பு விழாவை நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சிக்கான அழைப்பை அலிஷ்பா காலித் என்பவருக்கும் வழங்கியிருந்தது.

ஆனால், அவர் மே 2025ல் வெளியிட்ட பழைய சமூக ஊடக பதிவுகள் —
இந்தியாவின் “ஆப்பரேஷன் சிந்தூர்” மீது விமர்சனங்களையும் “Pakistan Zindabad” போன்ற வாசகங்களையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பதிவுகள் மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானபோது,பலர் மலபார் கோல்ட் நிறுவனம் “இந்தியாவை அவமதித்தவருடன் இணைந்துள்ளது” என குற்றம் சாட்டினர்.

இதன் பின்னர், சமூக ஊடகங்களில் “#BoycottMalabarGold” என்ற பிரச்சாரம் வேகமாக பரவியது.

சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு பதிலாக மன்னிப்பு தெரிவிக்காமல், மும்பை உயர் நீதிமன்றத்தில் (Bombay HC) மதிப்பை குலைக்கும் தவறான தகவல்களைத் தடுக்க வழக்கு தொடுத்தது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29 அன்று நீதிபதி சந்தீப் வி. மர்னே முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.அப்போது நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது:

“அலிஷ்பா காலித் நேரடியாக அல்லாமல், ‘JAB Studios’ என்ற மூன்றாம் தரப்பு நிறுவனம் வழியாக அழைக்கப்பட்டார்.அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் மற்றும் சர்ச்சைகள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே நிகழ்ந்தவை.”

நிறுவன பிரதிநிதிகள் விளக்கம்:
அவரது பதிவுகளை நிறுவனம் அறிந்ததும், உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.இந்த சர்ச்சை ஒரு நேர்மறை இலக்கைக் குலைக்க முயலும் திட்டமிட்ட பிரச்சாரம் எனவும் குற்றம் சாட்டினர்.

நீதிமன்றம் மலபார் கோல்ட் நிறுவனத்தின் சார்பாக தற்காலிக தடை உத்தரவை வழங்கி, சமூக ஊடகங்களில் இருந்த 442 URLகளை அகற்றவும், தொடர்புடைய தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் உத்தரவிட்டது.

சமூக ஊடக போராட்டம்

இதற்கிடையில், விஜய் படேல் என்ற எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பயனர்,
தனக்கு மலபார் கோல்டிலிருந்து சட்ட நோட்டீஸ் வந்ததாகக் கூறினார்.
அவர் பதிவு செய்தது:

“பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை அழைத்த மலபார் கோல்டின் உண்மையை வெளிப்படுத்தியதற்காக என்னை சிறையில் அடைக்க விரும்புகிறார்களாம்.
நான் இந்திய இராணுவத்தின் பெருமைக்காக சிறைக்கு செல்லத் தயார்.
பணம் இருப்பதால் உண்மையை ஒடுக்க முடியாது. பார்த்துவிடலாம் — உங்களது அதிகாரம் வெல்லுமா அல்லது இந்தியர்களின் ஆதரவா?”

அந்த பதிவு சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான ரீபோஸ்ட்களையும் கருத்துகளையும் பெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது:

  • அலிஷ்பா காலித் உடனான ஒப்பந்தம் தற்காலிகமாக மட்டுமே இருந்தது.

  • அவ்வழியாக எந்த அரசியல் கருத்தும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

  • சர்ச்சை பெரிதாகியதும் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் இன்னும் பேசப்பட்டு வருவதால்,
பிராண்டின் இமேஜ் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரை வழக்கு தொடரும் என சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous articleவிஜய்கான கரிசனம் நாளை வெறுப்பாக மாறலாம்.. காரணம் விஜய் ஆனால் கோபம் அரசு மீது.. மணியின் அரசியல் எச்சரிக்கை!!
Next articleசாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!