தமிழக அரசியலில் கூட்டணி அரசியல் வெறும் தேர்தல் கணக்காக மட்டுமல்ல, ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் அதிகார அரசியலாகவும் மாறியுள்ள நிலையில், பாமக கட்சிக்குள்ளேயே அப்பா மகனுக்கிடையே உருவாகி வரும் இரட்டை நிலைப்பாடு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அ.தி.மு.க–பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகஅறிவித்துள்ளது, அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸ் அணியின் நகர்வுகள் முற்றிலும் வேறு திசையில் செல்வதாகத் தெரிகிறது.
அன்புமணி அணியின் அரசியல், அ.தி.மு.க மற்றும் பாஜக உடனான கூட்டணி வழியாக தனக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அதிகார அரசியலை நோக்கி நகரும் நிலையில், ராமதாஸ் அணி சற்றும் சளைக்காமல் வேறு வகையில் வியூகம் வகுப்பதே தற்போதைய அரசியல் கூட்டணி குழப்பத்தின் மையமாக உள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணிக்குள் செல்லும் முயற்சிகள், நேரடி அறிவிப்புகளாக இல்லாவிட்டாலும், அதற்கான மறைமுக அரசியல் சமிக்ஞைகளாக வெளிப்படுவது, அ.தி.மு.க மற்றும் பாஜக தலைமைக்கு ஒருவித அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலை, முதலில் அ.தி.மு.க-க்கு தான் சிக்கலை உருவாக்குகிறது. எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஒரு முக்கிய கட்சி, உட்கட்சி பிரச்சனையால் பிளவுபட்டு இரு அணிகளாக பிரிந்துள்ளது வாக்குகள் சிதறடிக்கவே செய்யும், மேலும் இது தேர்தல் சமயத்தில் நம்பகத்தன்மை குறைவுக்கு வழிவகுக்கும். அதேபோல், பாஜக-க்கு இது இன்னும் பெரிய தலைவலியாக மாறுகிறது. தமிழகத்தில் கூட்டணி அரசியலை ஒருங்கிணைத்து வைத்திருக்க முயலும் பாஜக, பாமக உள்ளேயே உருவாகும் இந்தப் பிளவால், தனது அரசியல் கணக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது.
மூன்றாவது, இந்த அரசியல் நகர்வு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவது அன்புமணி அணிக்கே. தனக்கான அதிகார அரசியலை நோக்கி பயணிக்கும் அன்புமணி, தந்தை ராமதாஸ் வகுக்கும் அரசியல் வியூகத்தால், கூட்டணியில் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். குறிப்பாக குறைவான சீட், மற்றும் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரங்களில் அன்புமணிக்கு இது பின்னடைவாகவே அமையும். ராமதாஸ் தரப்பையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும், அதே நேரத்தில் தைலாபுர தரப்பு திமுகவுக்கு செல்லும் சாத்தியத்தை திறந்தவையாக வைத்திருப்பது, அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை வலிமையையே பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது.
கட்சியை கைப்பற்றியதாக அன்புமணியும், அவர் மூலமாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டதாக பாஜக மற்றும் அதிமுகவும் காய் நகர்த்த இந்த அரசியல் கணக்கில், ராமதாஸ் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒன்று – அ.தி.மு.க-க்கு அழுத்தம், இரண்டு – பாஜக-க்கு அரசியல் எச்சரிக்கை, மூன்று – அன்புமணியின் அதிகார அரசியலுக்கு கட்டுப்பாடு. இதன் மூலம், “பாமக என்றால் ராமதாஸ் தான்” என்ற அரசியல் செய்தியை மீண்டும் மையத்திற்கு கொண்டு வருவதும் இந்த நகர்வின் உள் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் ராமதாஸ் தரப்புக்கு அன்புமணி அணியை விட அதிக தொகுதிகளை ஒதுக்கி தருவதாக சமாதானம் செய்யலாம். இல்லையெனில் திமுக கூட்டணியில் இணைந்து வாக்குகளை பிரித்து அதிமுகவின் தோல்விக்கு வழி வகுக்கலாம். கட்சியே போனாலும் சம்பந்தப்பட்டவர்களை கதற விடுவதில் ராமதாஸ் கில்லாடி என்பதை நிரூபிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறார்.