கிணறு தோண்டும் போது விசவாயுவில் சிக்கிக்கொண்ட கூலித் தொழிலாளியை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் விச வாயுவால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர். இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு ஒன்றை வெட்டி வருகிறார்.இந்த கிணற்றை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் வெடிவைத்து வெட்டி வருகிறார். வெடி வைத்தும் தண்ணீர் வராததால் லட்சுமணன் சைடு போர் போட்டுள்ளார். மேலும் இந்த சைடு போரில் தண்ணீர் வருகிறதா என்று பார்க்க ராதாகிருஷ்ணன் என்பவர் சென்றுள்ளார் அப்பொழுது அவர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அவரை காப்பாற்ற சென்ற பாஸ்கர் என்பவரும் விஷவாயு தாக்கி கீழே விழுந்துவிட்டார்.
இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கிணற்றில் இறங்கினர்.கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆன ராஜ்குமார், தனபால்,பால்ராஜ் ஆகியோரும் மயங்கி விழுந்ததால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை தலைவர் தாமோதரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் ஆக்சிசன் பெட்டிகளுடன் கிணற்றின் உள்ளே இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பாஸ்கர் என்பவரை மயங்கிய நிலையில் மீட்டனர் மேலும் ராதாகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்களில் ஒருவரான ராஜ்குமார் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.தீயணைப்பு வீரர்கள் 2 பேர் தற்பொழுது மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.