அரசியல் பாதையில் ராமதாஸின் அடுத்த அதிரடி!! அன்புமணிக்கு செக் வைக்கிறாரா??

பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் பொதுவெளியில் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அமைதியாக இருந்த அவர், தற்போது ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்த மோதலுக்கு மத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் தரப்பு படுதோல்வியைச் சந்தித்தது. அவர் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் இழந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த ராமதாஸ், கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாள் விழாவில் அரசியல் துறவறம் பூண்டுள்ளதாக அறிவித்தார். மேலும், பாமக தலைவர் அன்புமணிக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் அரசியல் பேசக்கூடாது என தனது வீட்டின் முன்பும் அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்.

இந்நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு புதிய அறிவிப்புடன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார் ராமதாஸ். ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும், கல்வி, வழிபாடு, நீதிமன்றம், கடைகளின் பெயர்ப் பலகைகள் எனப் பல்வேறு தளங்களில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றும் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுப்பதையும், தமிழை மக்களின் அன்றாட வாழ்வியல் மொழியாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 22-ம் தேதி அவரது தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஆனால், இங்குதான் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ராமதாஸ், தற்போது புதிய அமைப்பைத் தொடங்கியிருப்பது ஏன்? இது வெறும் தமிழ் மொழி சார்ந்த இயக்கமாக மட்டுமாக இருக்குமா? அல்லது நாளடைவில் தனி அரசியல் கட்சியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பாமகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிக்கு மத்தியில் ராமதாஸ் எடுத்துள்ள இந்தப் புதிய முயற்சி, அவரது மகனுக்கும் எதிராக திரும்புமா என்று பல கோணங்களில் அரசியல் வல்லுனர்கள் இதுகுறித்து பேசி வருகின்றனர்.