30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

Photo of author

By CineDesk

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன.

இந்த இணைப்பு பெட்டியலில்தான் தெருவிளக்கின் மொத்த கண்ட்ரோலும் இருந்தது.தெரு விளக்கை போட வேண்டுமென்றால் அந்தக் குருவிக் கூட்டைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.குருவிக் கூட்டை கலைக்க மனமில்லாமல் அந்த கிராம இளைஞர்களுடன் சேர்ந்து அந்த ஊர் மக்கள் அனைவரும் கடந்த 30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவவே அந்த கிராம மக்களுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து அந்த கிராம இளைஞர்களிடம் கேட்டபோது நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்படுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, போன்றவற்றின் காரணமாக குருவிகள் இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.குருவி இனத்தை காப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.30 நாட்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் குருவிளுக்காக இருட்டில் வாழத் தயார் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இளைஞரின் இந்த பேச்சானது பொதுமக்கள் அனைவரின் மனதிலும் ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.