தமிழகத்தில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில், கொரோனாவிற்கான தடுப்புமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. “கோவேக்சின்” என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைப் பரிசோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் தமிழ்நாட்டில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு இரண்டு தன்னார்வலர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 மில்லி தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
பிறகு வாரத்திற்கு ஒரு முறை அவர்களது உடல் பரிசோதனை செய்யப்படும். பிறகு 28வது நாள், 48வது நாள், 102வது நாள், 109வது நாள் என அவர்களின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படும். அதில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா, அது எந்த அளவு உருவாகியுள்ளது என கணக்கிடப்படும். இதில் மருந்தின் திறனும், அதன் அளவும் தீர்மானிக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான மனிதர்களுக்கு அடுத்த கட்ட பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இதன் பிறகே மருந்தின் திறன் என்ன என்பதை அறிய முடியும் என எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார். இந்த சோதனையின் முடிவுகள் வர ஆறு மாதம் வரை ஆகலாம் எனவும், மேலும் பரிசோதனைக்கு வரும் தன்னார்வலர்கள் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.