கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பிஜேபியின் முதலமைச்சர் எடியூரப்பா அரசு, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், 2000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சி அமைப்பான காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “கடந்த 3ஆம் தேதியே கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியிருந்தேன், இதன் காரணமாக 20 முறைக்கு மேல் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை எனக்கு இது சம்பந்தமாக பதில் அளிக்கவில்லை.17 நாட்கள் கழித்து, இது உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டி.ராமுலு பதில் அளித்திருக்கிறார்.
கர்நாடக எடியூரப்பா அரசு, இதுவரை கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.4167 கோடி செலவு செய்து உள்ளது.
இதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்திருக்கிறது. சிகிச்சைக்கான உபகரணங்கள் தற்போது சந்தையில் உள்ள விலையைவிட, கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் ரூ.4 லட்சத்திற்கு ஒரு வென்டிலேட்டரை வாங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அதே வென்டிலேட்டரை ரூ.5 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை கொடுத்து வாங்கியிருக்கிறது.
தற்போது மார்க்கெட்டில் தரமான தெர்மல் ஸ்கேனர் ரூ.2000க்கு விற்கப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு அதனை ரூ.5000க்கு மேல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் (PPE KIT) மார்க்கெட்டில் ரூ.330க்கு விற்கப்படுகிறது. அதே கவச உடைகளை ரூ.2112க்கு வாங்கியுள்ளனர்.
ரூ.5 லட்சம் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சம் உபகரணங்கள் தரம் இல்லை என அரசு நிராகரித்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களை கொன்ற சீனா அரசிடமிருந்து அதிக விலை கொடுத்து தரமில்லாத உபகரணங்களை வாங்கியது ஏன்?
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைவான விலையில் உபகரணங்கள் கிடைக்கிறது, ஆனால் கர்நாடகத்திற்கு இரண்டு மடங்கிற்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. கொரோனாவால் மக்கள் கொத்துக்கொத்தாக சாகும்போது, இதைப் பயன்படுத்தி கர்நாடக அரசு ரூ.2000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதனை நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்”.
மேலும் இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா சுகாதாரத்துறை அமைச்சர் டீ.ராமுலு, மருத்துவ உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோருடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் சுதாகர், “கடந்த ஆண்டு காங்கிரஸ்-மஜத கூட்டணியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் அதிநவீன வென்டிலேட்டரை ரூ.18 லட்சத்திற்கு வாங்கி உள்ளோம். சித்தராமையா கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அதை நாங்கள் சட்ட ரீதியாகவும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என கூறினார்.