இரண்டு வாரங்களுக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பாக்ஜான் எண்ணெய்க் கிணற்றில் இரண்டாவது வெடிப்பு – ஏற்கனவே நடந்த வெடிப்பைப் பரிசோதனை செய்ய வந்த ஆய்வாளர்கள் மூன்று பேர் காயமடைந்திருக்கிறார்கள். கனமழை மற்றும் வெள்ள அபாயத்தால் பீஹார் மாநிலத்தில் “ரெட் அலர்ட்” விடப்பட்டுள்ளது. சமீபத்திய இடி/மழையால் இதுவரை 92 பேர் இறந்திருக்கிறார்கள்.
எதிர்பார்க்கமுடியாத தீவிர பருவகால நிகழ்வுகள் (Unpredictable and extreme weather events), இயற்கை சீற்றங்கள், கொள்ளைநோய்கள் என சமகால உலகின் அச்சுறுத்தல் எதை எடுத்துக்கொண்டாலும் அதற்கும் இயற்கைச் சீரழிவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். உயிர்ச்சேதம், பொருட்சேதம் என இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இப்போது மனித இனத்துக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். காலநிலை மாற்றத்துக்கான செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பர்க், “என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்?” என்று ஒரு மாநாட்டில் உலகத் தலைவர்களை நோக்கிக் கேட்டார். வருங்கால சந்ததிகளின் ஒட்டுமொத்தக் கூக்குரலாக, விடையற்ற கேள்வியாக அது இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
இருக்கிற காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டுமானால் நமக்கு இன்னும் கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்களும் வரையறைகளும் தேவை. ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. சமீபத்தில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திலிருந்து சூழலியல் சார்ந்த பல பாடங்கள் நீக்கப்பட்டன. அதையொட்டி, சூழல் பற்றிய அடிப்படைப் புரிதல் ஏன் தேவை அது கிடைக்காமல் போவதன் ஆபத்து போன்ற பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் கிளம்பிய பின்னரும் பாடத்திட்டம் இன்னும் சரிசெய்யப்படவில்லை. அந்த வரிசையில், சுற்றுச்சூழலுக்கான அடுத்த அச்சுறுத்தலாக வந்திருக்கிறது சுற்றுச்சூழல் தாக்க திட்ட மதிப்பீடு – அறிவிக்கை (Environmental Impact Assessement Draft, 2020). மிகச் சுருக்கமாக சொல்லப்போனால், சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்குமான இழுபறியில், நெகிழ்வுகள், தளர்வுகளை அதிகமாக முன்னிறுத்தியிருக்கிறது இந்த அறிவிக்கை.
சூழலைப் பாதுகாப்பதாக இல்லாமல், நிறுவனங்களின் தொழில்வளர்ச்சியை உறுதிசெய்வதில் முனைப்புக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அழுத்தமான சட்டங்கள், சூழல்சார் கெடுபிடிகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நாம் சமகாலத்திலேயே சந்தித்துவருகிறோம். பாக்ஜான் எண்ணெய்க்கிணறு வெடிப்பும் வைசாக்கில் நடந்த நச்சுவாயுக் கசிவும் சமீபத்திய உதாரணங்கள்.
“ஆரோக்கியமான ஒரு சுற்றுச்சூழல் என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை” என்று சூழலியலாளர் ரேச்சல் கார்சன் சொன்னது நினைவுக்கு வருகிறது.