நாடு முழுவதும் கொரோனா தொற்று பிரச்சனை அதிகரித்த வண்ணமே உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் கடந்த சில மாதங்களாக இது பற்றியே இருந்தது.ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் செயல்பட ஆரம்பித்துள்ளன.
தற்போதைய சூழலில் ஆளும் அதிமுக தரப்பில் முக்கிய கூட்டணி கட்சியாக பாமக,தேமுதிக மற்றும் பாஜக உள்ளன. ஆனால் சில நேரங்களில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பார்க்கும் போது கடந்த மக்களவை தேர்தலில் உருவான கூட்டணி தொடருகிறதா? இல்லையா? என்ற சந்தேகம் பெரும்பாலோனோர் மனதில் ஏற்பட்டுள்ளது.
இதே போல எதிர்கட்சியான திமுக தரப்பில் காங்கிரஸ்,மதிமுக,விசிக,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதிமுக கூட்டணியை போலவே திமுக கூட்டணியிலும் சிறுசிறு உரசல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. குறிப்பாக திமுக எம்பிக்களான தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் ஒரு சில கருத்து வேறுபாடுகளுடனே தொடர்ந்து கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றன. இந்நிலையில் இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகளின் தற்போதைய செயல்பாடுகளை கவனிக்கும்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அணி மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் அன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததிலிருந்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் திராவிட கழக தலைவர் வீரமணி அவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியலில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கடந்த கால தமிழக அரசியலை கவனிக்கும்போது ஒவ்வொரு முறையும் கூட்டணிகள் மாறும் போது அதற்கு ஆரம்ப புள்ளியாக இதுபோன்ற வாழ்த்துச்செய்திகள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்வுகள் பாலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பிறந்தநாள் வாழ்த்து பாமகவை திமுகவின் பக்கம் வளைப்பதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கருதப்படுகிறது. அதேபோல இதை உறுதி செய்யும் வகையில் மருத்துவர் ராமதாஸும் சமீபகாலங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிப்பதை ஓரளவு குறைத்து வருகிறார்.
அந்த வகையில் திமுக தலைவர் முயற்சிக்கு ஏற்றவாறு பாமக வளைந்து கொடுக்குமா அல்லது விலகி செல்லுமா என தமிழக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.