ஜிஎஸ்டி மூலம் கிடைத்த தொகையில் மாநிலத்திற்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தர இயலாது என மத்திய நிதி செயலாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசின் நிதி செயலாளரான அஜய் பூஷண் பாண்டே, மத்திய அரசின் வருவாய் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி பங்கினை தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க முடியாது என பாஜகவின் எம்.பியான ஜெயந்த் சின்கா தலைமையில் நடைபெறும் நிதி நிலைக் குழுவிடம் கூறியுள்ளார் என அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் நேற்று செவ்வாய் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 2 உறுப்பினர்கள் கூறிய தகவலின் படி, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசுக்கு வருவாய் இழந்துள்ளது. அதனால் மாநில அரசுகளுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்கினை மத்திய அரசு கொடுக்க முடியவில்லை என அவர்கள் கூறினர். மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இழப்பீடு கொடுக்க ஜிஎஸ்டி சட்டத்தில் மறு ஆய்வு செய்ய இடம் உள்ளது எனவும், அதாவது அரசுக்கான வருவாய் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கும் கீழ் குறைந்தால் மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி பகிர்ந்தளிப்பது என்பது குறித்து மறு வரையறை செய்ய முடியுமென மத்திய அரசின் நாடாளுமன்ற நிதிநிலை குழுவிடம் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று மாநிலங்களுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்கினை கடைசி இழப்பீட்டுத் தவணையாக ரூபாய் 13 ஆயிரத்து 806 கோடியை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த ஜூலை மாதத்தில் மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்கும் வழிமுறையை பற்றி விவாதம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எந்த வருவாயும் இல்லாத காரணத்தால் அது நடைபெறவில்லை.
இது முதல் முறையாக பெரும் தொற்றினால் நாடாளுமன்ற நிதிநிலை கூட்டம் இந்திய பொருளாதாரத்தின் நிதி நிலைமைகளைப் பற்றி விவாதிக்காமல், இந்தியாவின் வளர்ச்சி நிறுவனங்கள் பற்றியும், சூழலியல் புதுமைகளுக்கான நிதிகள் பற்றியும் விவாதித்ததற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, நடந்து முடிந்த பட்ஜெட் கூட தவறானது தான் என கூறியிருந்தார். அந்த பட்ஜெட் கூட கொரோனாவிற்க்கு முன் போடப்பட்டதாகும். இந்த வருவாய் இழப்பு குறித்தான தெளிவான பார்வை அரசிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற நிதிநிலை குழுவானது அடிப்படைக் கேள்விகளுக்கும் கூட பதில் தர முடியவில்லையெனில் அந்தக் குழு எதற்கு? அதனை கலைத்துவிட வேண்டும் என பிரபுல் படேல் விமர்சித்துள்ளார்.