மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்
ஏற்கனவே வெளிவந்த தகவல்களின் படி தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திங்கள் அன்று இது சம்பந்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ், சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையொட்டி, தனது குடும்பத்தினருடன் திருச்சி வந்துள்ள சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலை வழிபாடு நடத்துகிறார். பிறகு சென்னைக்கு திரும்பி, மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பிரச்சாரம் செய்த ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் திமுக ஆட்சியை பிடிக்க சாதகமான சூழ்நிலை இருந்தும் அதை செய்ய முடியாத ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்பது நடக்குமா? என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.