தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண்களே அடிப்படையாக இருப்பதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் 80 சதவீதத்தையும் வருகைப்பதிவேட்டிலிருந்து 20 சதவீதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தபட்டு வந்த நிலையில்,அவ்வப்போது மதிப்பெண் வழங்குவதில் சில குளறுபடிகளும் நடந்தது.அவற்றையெல்லாம் சரி செய்து வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் (absent)என்றே குறிப்பிட்டுள்ளது என்றும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரு பாடம் எழுதாமல் போனவர்களுக்கு கூட தேர்ச்சி வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
இத்தகவலால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள் மற்றும், பெற்றோர்கள் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது உண்மையாக இருந்தால் ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெற்றோர்களின் சார்பில் வேதனை தெரிவித்துள்ளனர். இது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.