மீண்டும் திமுகவில் சேர கு.க.செல்வம் அளித்த கடிதம்? பாஜகவிற்கு திமுக வைத்த செக்!

0
144
Ku Ka Selvam Again Join in DMK
Ku Ka Selvam Again Join in DMK

தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடையே தான் எதிர்ப்பு அரசியல் நடந்து வந்தது. ஆனால் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பின்னர் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் போது இந்த சூழல் மாறி திமுக மற்றும் பாமக என்று எதிர்ப்பு அரசியல் பிரதானமாக நடந்தது.

ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக மற்றும் திமுக இடையே இந்த எதிர்ப்பு அரசியல் நடந்து வருகிறது. அந்த வகையில் பாஜக தலைமை திமுகவின் முக்கிய நபர்களை தங்கள் பக்கம் இழுப்பதும், அதேபோல் திமுக பாஜகவின் உறுப்பினர்களை தங்கள் அணியின் பக்கம் இழுப்பதும் தமிழக அரசியலில் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த பட்டியிலில் முதலில் இணைந்தவர் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி.அதே போல பாஜகவிலிருந்து விலகி எஸ்.கே. வேதரத்தினம் திமுகவில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாஜகவின் பார்வை திமுகவின் கு.க.செல்வம் பக்கம் திரும்பியது. சமீபத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதால் சர்ச்சையை உண்டாக்கிய கு.க.செல்வம் அவர்களை திமுகவிலிருந்து நீக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக கு.க.செல்வம் அவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதமும் எழுதியிருந்தார். அதே நேரத்தில் திமுக பிரமுகர்களை இழுக்க நினைக்கும் பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவில் அதிருப்தியில் உள்ள பிரமுகர்களை இழுக்கும் பணியில் திமுக தலைமை இறங்கியுள்ளது.இதனை உணர்ந்து கொண்ட பாஜக தலைமை கொஞ்சம் பின்வாங்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் திமுகவில் இருந்து பாஜகவில் அடைவதாக கூறிய கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைய விளக்கம் கேட்டு திமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தன்னை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கியது இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால், சஸ்பெண்ட் தொடர்பான நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் டெல்லி சென்ற திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அங்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் இத்துடன் விடாமல் உங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று கேட்டு திமுக சார்பில் நோட்டீஸும் அனுப்பி அவருக்கு அடுத்த செக் வைக்கப்பட்டது.

Ku Ka Selvam Again Join in DMK
Ku Ka Selvam Again Join in DMK

இந்நிலையில், சூழ்நிலையை உணர்ந்து கொண்ட கு.க.செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களுடைய ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப் பெற்றது. அதில், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது. எனவே, தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தங்கள் நோட்டீஸுக்கு நான் விவரமாக விளக்கம் அளிப்பதற்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளன.

தங்கள் நோட்டீஸில் நான் பொய்யான தகவல்களை சொன்னதாக நோட்டீஸில் முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் என்ன தகவல்களை பொய்யாக சொன்னேன் என்று குறிப்பிடப்படவில்லை. நான் கூறியவை அனைத்தும் பொய் என்று நானே அனுமானிக்கும் நிலையில் என்னை வைத்து குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

Ku Ka Selvam Again Join in DMK
Ku Ka Selvam Again Join in DMK

அதுபோன்று இரண்டாம் குற்றச்சாட்டில் நான் அவதூறாக பேசியதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், நான் பேசியதில் எது அவதூறுகள் என்று குறிப்பிடப்படவில்லை. இரண்டு இணைப்புகளை அனுப்பி என்னை அனுமானிக்க சொல்லியிருக்கிறீர்கள்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தொண்டர்களையோ, தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுதான் அண்ணா அவர்களது கோட்பாடு.

நம் தலைவர் கருணாநிதியை பாஜகவைச் சேர்ந்த பாரத பிரதமர் நேரில் வந்து பார்த்தது அனைவருக்கும் தெரியும். எனவே, கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது.

எனவே, தங்கள் நோட்டீஸை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்து மேற்படி பத்தியின் நான் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன் என்றும் அந்த கடிதத்தில் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

Previous articleபாக்சிங் டே டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்ற வாய்ப்பு
Next articleபொறியியல் படிப்புக்கு சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி