கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதி மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கேரளா மாநிலம் பல பகுதிகளிலும், மூணார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைந்திருந்த இருபது வீடுகள் நிலச் சரிவிற்குள் புதைந்தன.
அப்போது வீடுகளின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு ஒரு சிலர் மட்டும் வெளியே வந்தனர். மேலும் அந்த வீடுகளுக்குள் இருந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ராஜமலை பெட்டி முடி இடையே உள்ள மலைப்பாதையில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. அது அந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
இந்தநிலையில் உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவந்து வாகனங்கள் சென்றுவர பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்பிறகு மீட்புப்பணி வாகனங்கள் சென்றது, மேலும் அவ்வப்போது தொடர் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
கடுமையான மழையிலும் மீட்புப் பணிகள் செய்து கொண்டேதான் வருகிறார்கள். இதுவரை மீட்பு பணியின் மூலம் நிலச்சரிவில் புதைந்தவர்கள் 42 பேரை சடலமாக மீட்டுள்ளனர். இன்னும் எவ்வளவு பேர் சிக்கி உயிர் இழந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.