கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம்.
இருந்தபோதும் ஜோசப் கணேசனின் வீட்டு பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் மீண்டும் வட்டி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து கணேசன்,ஏரல் காவல் நிலையத்தில் ஜோசப் இதுபோன்று வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ளார். இருந்தபோதிலும் இதுவரை போலீசார் தரப்பில் இருந்து
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த கணேசன் மற்றும் அவர் மனைவி,இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திரண்டு திடீரென தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காவலுக்கு நின்ற பாதுகாப்பு போலீசார்கள் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.பின்னர் கணேசனின் குடும்பத்தை சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.