அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் H1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்கப்படாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய ஏராளமான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் H1B விசா வழங்குவதற்கான விதிகளில் சில தேர்வுகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்தது.
அதில் ‘ அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களுக்கு H1B,L1 விசா வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் அத்தகைய வெளிநாட்டு பணியாளர்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதேபோல் அவர்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த பணியை மட்டும் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை நியமிப்பது நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான தேவை தற்போது இருப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்தவேண்டும். அந்தப் பணியாளர் தற்போது வீட்டிலிருந்து அதே பணியை தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு H1B வீசா வழங்கப்பட மாட்டாது.
புதிய தளர்வுகள் அனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களின் மனைவிக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் பொருந்தும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.