1963-இல் கும்பகோணத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
BE படித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் BEக்கு அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு அதுவாகவே வந்துவிடும் என நம்பி அதை சரியாக வாங்கத்தெரியாமல் பி.இ படிப்பை கோட்டைவிடுகிறார்.
அதன் பிறகு, வேறு வழியில்லாமல் ITI படித்து, எதோ ஒரு தொழிற்சாலையில் மாதம் 600 ரூபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தொழிலாளர்கள் சங்க குழப்பத்தில் ஜெயிலுக்கு சென்றவர், தன் போக்கில் வாழ்ந்து எப்படியாவது “பெரியாள்” ஆகி விடலாம் என சின்ன சின்ன பட்டாசு கடை நடத்தி நஷ்டப்பட்ட பிறகு, சேலைகளை வாங்கி வீடு வீடாகச் சென்று விற்று எதுவும் முடியாமல் போனது.
வீட்டின் ஒரே வருமானமான அப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, வறுமை குடிகொண்டதால் ஒரே ஒரு வேளை மட்டும் சுக்காரொட்டிகள் உணவுடன், ஒரு நாடகக் கம்பெனியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக சாதாரண வேலைக்கு சேர்ந்தார்.
சின்ன வயதில் இருந்தே தனக்குள் இருக்கும் நடிக்கும் திறன் மற்றும் மிமிக்ரி ஆர்வத்தை அங்கே வெளிபடுத்தும் போது, நடிக்க வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டு அந்த நாடகக் கம்பெனியில் இருந்துக்கொண்டே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகனாக உருவாகவேண்டும் என்று லட்சியம் கொண்டார்.
நாடகங்களில் இவரது ஒன்லைனர்கள் பிரபலமாகி சங்கர் எனும் காமெடியன் மெல்ல மெல்ல கவனம் பெற்றார்.
இவர் காமெடியனாக நடிக்கும் நாடகத்தை ஒருமுறை பாக்கியராஜூம் ரஜினிகாந்தும் பார்க்க வருகிறார்கள், எப்படியாவது அவர்களை தன் நகைச்சுவை நடிப்பினாலும் காமெடி ஒன்லைனர்களாலும் இம்ப்ரஸ் செய்துவிடவேண்டும் என்று பரவலாக மெனக்கெட்டு இவரின் காட்சி வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும்போது இவர் வந்து பர்ஃபார்மெண்ஸ் செய்யும் ஐந்தாவது காட்சி வருவதற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் அவசரமாக கிளம்பி சென்றுவிட்டதால் சோர்ந்து போகிறார்.
மீண்டும் அதே நாடக கம்பெனியில் எடிபுடி வேலைகள் செய்து, சின்ன சின்ன காமெடிகளில் தலைகாட்டிக்கொண்டு இருக்கும் போது, ஒரு முறை எஸ்.எ.சந்திரசேகர் நாடகம் பார்க்க வந்தபோது இவரைக் கவனிக்கிறார்.
என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா? என்று அவர் கேட்க உடனே ஒப்புக்கொண்டு அங்கே வேலைக்கு சேர்ந்து எப்படியாவது இவரது படங்களில் நடித்து மிகப்பெரும் காமெடியனாகி விட வேண்டும் என எண்ணியபோது, கிடைத்ததென்னவோ உதவி இயக்குனர் வேலைதான்.
அந்த வேலை பிடிக்காமல், சதா காமெடி நடிகனாகும் ஆசையில் இருந்தவர், ஏனோதானோ என வேலை செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருநாள் இவரை கடுங்கோபத்தில் அனைவர் முன்பாகவும் போட்டு வெளுத்து விட்டார். அன்றிலிருந்து மிகவும் துருதுரு ஆளாக உருவாகிறார்.
படம் எடுக்கிறோமோ? இல்லையோ? ஆனால் தன்னிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு மாதாமாதம் முறையான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் பாணி. எனவே இவருக்கும் மாதாமாதம் சம்பளம் வந்துவிடும். அதுவும் இல்லாமல் எஸ்.ஏ.சி ஒரு பிஸியான காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த போது, வீட்டின் வறுமையை கொஞ்சம் கொஞ்சம் போக்க கிடைத்த வாய்ப்பாகவே அதை பார்க்கிறார்.
ஒரு இயக்குனர் ஆகும் ஆசையே இல்லாமல் உதவி இயக்குனர் வேலை தான் உலகில் மகத்தானது என்று நினைத்துக்கொண்டு அங்கே காலம் தள்ள எஸ்.ஏ.சந்திரசேகரனனின் ஆஸ்தான இணை இயக்குனராக உயர்கிறார். 16 படங்கள் அவரிடம் வேலை செய்திருக்கிறார்.
தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு பின்பு வந்தவர்கள் என அனைவருமே தனித்தனியாக சினிமா எடுக்க முயற்சிக்க இவருக்கு மட்டும் அந்த ஆர்வம் வராமலேயே இருந்தது. அது தேவையும் இல்லை என்று நினைத்திருக்கிறார். காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த அரவணைப்புதான். மாதாமாதம் கிடைக்கும் சம்பளம். எக்காரணத்தை கொண்டும் அதை பாதகமாக்கிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை சங்கர்.
உடன் வேலை செய்த உதவி இயக்குனர்கள் சங்கரை உசுப்பிக்கொண்டே இருக்க தானும் ஒரு இயக்குனராக ஆகியே தீர வேண்டும். இல்லையெனில் இந்த உலகம் நம்மை மதிக்காது என்று நினைக்கிறார். இவருடன் வேலை செய்த பவித்ரன் படத்தை ஆரம்பிக்கிறார் அவருடைய படத்தில் இணை இயக்குனராக வேலை செய்து வாய்ப்புகளும் தனியாக தேடிக்கொண்டு இருக்க பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பள்ளி நாட்களிலிருந்தே நடேசன் பார்க்கில் தான் அவரது பயணம் தொடங்கி இருக்கிறது என்பதால் அங்கேயே தினமும் அமர்ந்து கதையை உருவாக்குகிறார். மகேந்திரனின் படங்களை போல உணர்ச்சிகுவியலாக ஒரு சப்ஜக்ட், ஆனால் அதை யாரும் அப்போது இவரிடம் விரும்பவில்லை. எனவே கம்ப்ளீட் கமர்ஷியல் தான் வேண்டும் என நண்பர்கள் சொன்னபோது, ஜெண்டில்மேன் கதையை அதே நடேசன் பார்க்கில் அமர்ந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறார்.
எந்தெந்த தயாரிப்பாளர்களிடமோ வாய்ப்பை தேடி அலைய யாரும் கை கொடுக்காமல் சோர்ந்துபோயி SACயிடமே மீண்டும் சரண்டர் ஆகிவிடலாம், சாப்பாட்டிற்க்கும் வேலைக்கும் எந்த பாதகமும் இருக்கப்போவதில்லை என நினைத்து அங்கே போக முடிவெடுக்கிறார்.
கடைசியில் இவர் ஏற்கனவே பவித்ரனுடன் வேலை செய்த இரண்டு படங்களின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.
அப்போதுதான், நிஜமாகவே தான் ஒரு காமெடியன் அல்ல, நான் ஒரு இயக்குனர் என்பதை அவர் அப்போதுதான் உணர்கிறார்.
ஒரு சினிமாவிற்கு புரோக்ராம் செய்வது, ஷெடியூல் போடுவது, பட்ஜட் எழுதுவது போன்றவை தான் மிக முக்கியம். அதுவே அந்த படத்தின் மொத்தகட்டமைப்பை தீர்மானிக்கும் என்பதில் SAC கைதேர்ந்தவர். மேலும் தன்னிடம் வேலை செய்யும் எல்லா இயக்குனர்களுக்கும் அதை திறமையாக சொல்லிக் கொடுத்து விடுவார் எஸ்.ஏ.சந்திரசேகரன். சங்கர் அவரிடமிருந்து அதை திறமையாக கற்றவர் மட்டுமல்ல, அவர் வேலைசெய்த போது சில படங்களுக்கு அவரைவிட சிறப்பாக எழுதி கொடுத்து அசத்தியவர். அந்த கலையை அங்கே கற்றதால் தன்னுடைய வெற்றிக்கு எப்போதும் SAC தான் காரணம் என எப்போதும் பேசுவார்.
அப்போதுதான் சங்கர் – ஷங்கர் ஆகிறார்.
அவருக்கு இயக்குனர் ஆகும் லட்சியம் எல்லாம் எதுவும் இருந்தது இல்லை. ஆனால் “செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” என்பது தான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. வாழ்க்கையில் ஏதேதோ செய்து வந்தாலும், காமெடியனாகத்தான் இருப்பேன் என பிடிவாதமாக முயற்சித்தாலும், இயக்குனர் என்ற பிரம்மாண்ட அடையாளமே அவருக்கு கிடைத்தது. அவருக்குள் ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறான் என்று மிக தாமதமாகவே அவர் தெரிந்து கொள்கிறார்.
எந்தத் துறையாக இருந்தாலும் தனக்கு பிடித்த வேலையை நேர்மையாக திறம்பட செய்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை சங்கர் உணர்த்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டங்களில் ஒன்றான “எந்திரன்”. முதல் முறை பார்க்கும்போது என்ன வியப்பு ஏற்பட்டதோ அதே வியப்புதான் இன்றும்.
இன்று ஷங்கரின் பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சங்கர் சார்.