டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அமமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளது.ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படியே சென்றால் கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் புலம்பி வருகிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்ட அமமுக படுதோல்வி அடைந்த பிறகு தினகரன் மீதான மரியாதை தங்கதமிழ்செல்வனுக்கு மட்டும் அல்ல பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கும் போய்விட்டது. இதனால் பெரிய அளவில் அமமுகவில் ஈடுபாடு இல்லாமல் தான் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
இதனால் முக்கிய நிர்வாகிகள் சிலரை தினகரனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சின்னம்மா வந்த பிறகு நிலைமை மாறிவிடும் அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறி வந்துள்ளார். இதற்கிடையே தங்க தமிழ்செல்வனுக்கு மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தூது வந்துள்ளது. இதனால் அவரும் அதிமுகவில் மீண்டும் இணையும் முடிவுடனே பேச ஆரம்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் அதிமுகவிற்கு அழைத்துச் செல்லவும் தங்கதமிழ்செல்வன் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் மீது ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே தங்கதமிழ்செல்வனின் சொந்த ஊரான தேனியில் அமமுக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட தினகரன் ஏற்பாடு செய்தார். ஆனால் இந்த கூட்டம் குறித்து தங்கதமிழ்செல்வனிடம் தினகரன் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய பேசி வரும் நிலையில் தனது ஊரில் கூட்டம் போட்டு தினகரன் தனதுசெல்வாக்கை காட்டினால் அது தனது பேரத்தை பாதிக்கும் என்று தங்கதமிழ்செல்வன் கோபமடைந்துள்ளார். இதனால் தான் டிடிவி தினகரன் உதவியாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்கதமிழ்செல்வன் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். தினகரனின் உதவியாளர் அதனை செல்போனில் பதிவு செய்து தினகரனிடம் காட்டியுள்ளார்.
அதனை பார்த்து கோபமடைந்த தினகரன் உடனடியாக அந்த செல்போன் உரையாடலை ஊடகங்களுக்கு கிடைக்க செய்ய கேட்டுள்ளார். இதன் பிறகே அந்த ஆடியோ வைரல் ஆனது. இதனிடையே இப்படி தங்க தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவது தினகரன் மற்றும் தங்கதமிழ்செல்வன் இடையிலான பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் தங்கதமிழ்செல்வன் உடனடியாக அதிமுகவில் சேர துடித்ததற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.
தென்மாவட்ட தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை தினகரன் தரப்பு தங்கதமிழ்செல்வன் தரப்பிடம் கொடுத்ததாகவும் அதற்கான கணக்கை தற்போது கேட்டது தான் பிரச்சனையின் துவக்கம் என்று சொல்கிறார்கள். இதே போல் பணத்தை யார் யாரிடம் எல்லாம் கொடுத்தாரோ அவர்களிடம் எல்லாம் தினகரன் கணக்கு கேட்க உள்ளதாக கூறப்படுவதால் அமமுக நிர்வாகிகள் பலர் பீதியில் உள்ளனர்.
எந்த பணத்தை வைத்து டிடிவி தினகரன் அரசியல் செய்யலாம் என்று நினைத்தாரோ அதே பணமே தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேற காரணமாகி வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.