மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும், தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில், தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதித்துவ கணக்கை தொடங்க முடியாமல் கடுமையாக போராடுகிறது.
கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை கைகொடுக்கவில்லை.
பாஜக தற்போது வரை, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அது தனக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பாதிக்கும் என்று அதிமுக நினைக்கிறது. அதனால், பாஜகவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதையும் அதிமுக தவிர்த்து வருகிறது.
அதனால், தமிழகத்தில் கணிசமான அளவாவது வாக்குகளை பெற்று தமது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்காக, மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை நோக்கி வலை வீச ஆரம்பித்து விட்டது. அதில் திமுகவின் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றவர்கள் ஏற்கனவே சிக்கிவிட்டனர். எனினும், இவர்களது வருகை பாஜகவின் வாக்கு வங்கியை எந்த வகையிலும் உயர்த்தப் போவதில்லை.
அதனால், ஓரளவு தொண்டர்களை கையில் வைத்துள்ள, தேமுதிகவை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக, அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரிடமும் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக தொடங்கிய கால கட்டத்தில், பாஜகவில் இருந்த பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்கள் பலரும் தேமுதிகவில் ஐக்கியம் ஆயினர், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது, பாஜகவின் தொடர்பு எல்லைக்குள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக படு தோல்வியை சந்தித்தது. மேலும், உடல்நிலை காரணமாக, விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். கட்சியில் முழுக்க முழுக்க அவரது குடும்பத்தினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. இது, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த தேமுதிகவையும் கபளீகரம் செய்யும் வேலையை தொடங்கி விட்டது என்றே சொல்லப்படுகிறது.
–ராஜேந்திரன்