85 வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல், சொந்த உழைப்பில் வாழும் மூதாட்டியின் வெற்றிப் பயணம்.
விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (வயது 85). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர் கடந்த 60 வருடமாக நைலான் நூல் மூலம் பொம்மைகள் செய்து பல இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது மகன் மற்றும் மகளின் கவனிப்பில்லாமல் இருக்கும் இவர் அரசு தரும் முதியோர் ஒய்வூதியத்தை வைத்து வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
மேலும், தனது வாழ்வில் உள்ள அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, காலம் கடந்த வயதில் கற்ற கைத்தொழில் மூலம், முருகன் பொம்மைகள், மயில் பொம்மைகள், பைகள் போன்ற அலங்கார பொருட்களை செய்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். 85 வயதான நிலையிலும் தன்னால் தொடர்ந்து உழைக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் இந்த மூதாட்டிக்கு, தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.