திருப்பூர் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: குன்னத்துார், செம்மண் புளி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது மளிகை கடைக்கு வந்த, இரண்டு வாலிபர்கள், 50 ரூபாய்க்கு சிகரெட் உட்பட பொருள் வாங்கி, 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். செல்வி அதனை வாங்கிக் கொண்டு மீதி பணத்தை கொடுத்ததும், இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர். அந்த 500 ரூபாய் நோட்டு குறித்து சந்தேகப்பட்ட அவர், குன்னத்துார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். 500 ரூபாய் கள்ளநோட்டு தான் என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபி ரோட்டில், காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் தான் மளிகை கடையில் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றியது என்று தெரிய வந்தது. மேலும், அவர்கள் மதுரை, புதுமேட்டு தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 22), அலங்காநல்லுாரை சேர்ந்த புகழ் (வயது 20) என்பதும் மொத்தம் 28 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வைத்திருந்ததும் தெரிந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவிநாசி ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்தது யார் என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.