சிறுவன் என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்கிய காவலர்!!

0
95

ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய 13 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய காவலரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை: ஒண்டிப்புதூர் அடுத்த, சூர்யா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – பிரதிக்‌ஷா தம்பதியின் மகன் யுவன் (வயது 13). தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த வித தளர்வுகளுமின்றி 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், சிறுவன் யுவன் தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துர்கா ராஜ் சிறுவன் யுவனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணை மேற்கொண்ட காவலர், ஊரடங்கு காலத்தில் வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு பதிலாக தன்வசம் வைத்திருந்த லத்தியை கொண்டு அச்சிறுவனின் கை கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சிறுவனின் கை கால்களில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன. சிறுவன் என்று கூட பார்க்காமல் அடித்த காவலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிறுவன் யுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் துர்காராஜை சிங்காநல்லூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.