புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையை வரும் வாரத்திலிருந்து வழங்கப்பட உள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் 4 கிலோ அரிசி மற்றும் வகுப்புகள் வாயிலாக ரூ.290 முதல் ரூ.390 வரை ரொக்கமாக வழங்கப்படும். மாணவர்களின் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டை பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் அரிசி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு பள்ளியில் மானியத்தைப் பயன்படுத்தி சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரொக்கத்தொகை வழங்கிய பிறகு, அதன் விவரங்களைக் கணக்கெடுப்புத் தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்களிடம் உள்ள தொலைக்காட்சி கேபிள்/டிடிஎச், லேப்டாப், கணினி, டேப்லெட், ஸ்மார்ட் போன், பட்டன் கைப்பேசி, ரேடியோ போன்ற சாதனங்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து பின் கூகுள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் (மதிய உணவு) தனசெல்வம் நேரு அனைத்துப் பள்ளி தலைமைக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.