அரசு பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் தலைமையாசிரியர்!
வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர வைப்பதற்காக பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் புதிய உத்தியை கையாண்டு உள்ளார் தலைமையாசிரியர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் ஊராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்த ஊராட்சி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையே கிட்டத்தட்ட 16 மாணவர்கள் தான் படித்து வருகின்றனர்.
ஒரு ஆசிரியை மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், மாணவர்களை சேர்ப்பதற்காக தனது சொந்த நிதியிலிருந்து புதிதாக சேரும் மாணவர்களுக்கு 6,500 ரூபாய் செலவில் புதிய ஸ்மார்ட்போன்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
” படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் மொத்தமே 60 வீடுகள் தான் உள்ளது. அனைவரும் பனை தொழிலையே செய்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 16 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
அரசு எல்லா உதவிகளையும் செய்து வந்தாலும் மக்கள் தனியார் பள்ளிகளை நம்பியே தன் குழந்தைகளை கொண்டு போய் சேர்க்கின்றனர்.
தனியார் பள்ளிகளை போலவே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மிகவும் நல்லொழுக்கத்துடன் அனைத்து திறமைகளையும் கற்று வருகின்றனர். அந்த மாதிரியான வகுப்புகளும் பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன எனவும் கூறினார்.
மேலும் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இரண்டு மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கிருந்து வரும் ஆட்டோ செலவு ரூ. 800 ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து தருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக மாறிய நிலையில் மாணவர்கள் இணையவழி கல்வி பெற புதிய ஸ்மார்ட்போன் வழங்கியுள்ளதாகவும் மேலும் புதிதாக சேர இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புதிய ஸ்மார்ட்போன் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை நான்கு மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இன்னும் எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார்”.
இந்த மாதிரியான ஆசிரியர்கள் அனைவருக்கும் வேண்டும் என கூறி அவருக்கு பலவாறு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன