அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து காங். கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர் யாராக இருப்பினும் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
அதன் அடிப்படையில் பார்த்தால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான் தலைவர்களாக இருக்க முடியும்” என மாணிக் தாகூர் கூறியிருப்பது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியினுள் இருக்கும் உள்கட்சி மோதல்கள், தலைவர் பதவியில் மாற்றம் ஆகியவை குறித்தும் முன்னாள் அமைச்சர்கள், தற்போதுள்ள எம்.பி.க்கள், முதல்வர்கள் என 20 செல்வாக்குமிக்க முக்கியத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.
அதில், சோனியா, ராகுல் குறித்து வெளிப்படையாக விமர்சிக்காதபோதிலும், கட்சியின் தலைமை பற்றி ராகுல் காந்தி மீதுள்ள நம்பிக்கையில்லாத் தன்மையாக இருப்பதாக கூறப்பட்ட விஷயம் அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், பழையபடி சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை, கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்தத் தகவலை தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும் எனறும், கட்சி தலைமையில் கூட்டுத் தலைமை இருந்தால்தான் ஒன்றாக இருக்கும் எனவும் மற்றொரு தரப்பினர் குரல் கொடுப்பதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, காமராஜர் போன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையே இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்தாகூர் கூறியதாவது, “சோனியா, ராகுல் காந்தி செய்த தியாகம் போன்று வேறு யாரும் காங்கிரஸிற்காக செய்யவில்லை. தொண்டர்களிடம் கேட்டால் யார் தலைவராக வேண்டும் என்பது தெரியும்.
கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை சோனியா, ராகுல் தான் தலைவராக வர வேண்டும் எனக் கூறுவார்கள். மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கட்சியில் ஏற்றுக் கொள்ள கூடாது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில் கட்சியின் தலைவர்கள் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். அதன்படி பார்த்தால், சோனியா, ராகுல் தான் தலைவர்களாக இருக்க முடியும்” என காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் காட்டமாக தெரிவித்துள்ளார்.