வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்..!! முதல்வர்!!

Photo of author

By Parthipan K

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் தினமும் 350 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த காய்ச்சல் முகாம்களில் 3.25 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இதனையடுத்து முதல்வர், 26 பயனாளிகளுக்கு ₹73.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரூ.32.17 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் ரூ.25.54 கோடியில் முடிவுற்ற 33 பணிகளை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கட​லூர் மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், இங்கு சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,544 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.225 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அரசு உதவி செய்து வருகிறது. கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.