ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

Photo of author

By Kowsalya

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு பெருமாள் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளையே ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இவ்விழாவை பற்றி கூறப்பட்டுள்ளது.

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வாரும்,தேவாரத்தில் சம்பந்தரும், ஓணம் பண்டிகையைப் பற்றி பாண்டிய மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை பற்றியும் கூறியுள்ளனர்.

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களில் கொண்டாடப்படுவதில்லை. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்

உணவு:

ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக ” இஞ்சிக்கறி”, “இஞ்சிப்புளி” ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

கைகொட்டுக்களி

ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் “கைகொட்டுக்களி”. கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

யானைத்திருவிழா

ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி அழித்த தலம்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.